விஸ்வரூபமெடுக்கும் காளி போஸ்டர்! மோதிக்கொள்ளும் பாஜக - திரிணாமுல்..மஹுவா மொய்த்ரா என்ன சொன்னார்?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், காளி போஸ்டர் விவகாரத்தில் தெரிவித்த கருத்துதான் மேற்கு வங்க அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.;

Update: 2022-07-07 02:39 GMT

மஹுவா மொய்த்ரா.. நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் பேச்சால் இந்திய அளவில் கவனம் பெற்ற எம்.பி..

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், காளி போஸ்டர் விவகாரத்தில் தெரிவித்த கருத்துதான் மேற்கு வங்க அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மஹுவா மொய்த்ரா, தன்னைப் பொறுத்தவரையில் காளி மது மற்றும் மாமிசத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்தான் எனக் கூறியிருக்கிறார். தங்கள் கடவுளை கற்பனை செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கிறது;

சில இடங்களில் கடவுளுக்கு மது வழங்கப்படுகிறது; சில இடங்களில் அவ்வாறு செய்வது தெய்வ நிந்தனையாக பார்க்கப்படுகிறது; சிக்கிம் சென்றால் அங்கு காளிக்கு மதுபானம் படைக்கப்படுகிறது; உத்தரபிரதேசம் சென்று இதனை செய்ய சொன்னால் நிந்தனையென எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதனையடுத்து காளி வழிப்பாட்டுக்கு பெயர்போன மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர், காளியை நிந்தித்துவிட்டார் என பாஜக அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. ஆனால் மஹுவா மொய்த்ராவின் கருத்து அவரது சொந்த கருத்து என்றும் இது கட்சியின் கருத்தல்ல என்றும் கூறி இந்த சர்ச்சையிலிருந்து விலகிக்கொண்டது திரிணாமுல் காங்கிரஸ்.மஹுவா மொய்த்ரா கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாஜக ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இந்து வெறுப்பு மதவெறுப்பாளர்களால் நிரம்பியிருக்கிறது; மேற்கு வங்கம் மதிக்கும் காளியை அவரது கட்சி எம்.பி. அவமதிப்பது ஒவ்வொரு பக்தரையும் புண்படுத்தியிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

பாஜகவினர் மஹுவா மொய்த்ரா பேச்சு அடங்கிய சிறிய வீடியோவை பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிறார்கள். கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டமும் நடத்தியுள்ளனர். மஹுவா மொய்த்ராவை திரிணாமுல் காங்கிரசிலிருந்து நீக்க வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என மாநில பாஜக வலியுறுத்தியிருக்கிறது.

பாஜகவினருக்கு பதிலடி கொடுத்திருக்கும் மஹுவா மொய்த்ரா, பொய் சொல்வது தங்களை சிறந்த இந்துவாக்காது எனவும் எந்த ஒரு படத்தின் போஸ்டரையும் தான் ஆதரிக்கவில்லை என்றும் தராபித் காளி கோவிலுக்கு சென்று பிரசாதமாக என்ன வழங்கப்படுகிறது என்பதை பாருங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

காளியை வழிபடும் யாரும் பயப்பட மாட்டார்கள் எனக் கூறியிருக்கும் மஹுவா மொய்த்ராவும் ஜெய் காளி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்