ஓலா, உபர் ஆட்டோக்களை இயக்க அனுமதி - கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கர்நாடகாவில் ஓலா, உபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்க, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் ஓலா, உபர், ரேபிட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோக்கள் இயக்குவதை நிறுத்துமாறு, அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. கர்நாடக அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந்நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து ஓலா, உபர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடக அரசு ஓலா, உபர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதில் முடிவெடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. மேலும் கட்டணம் குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்கும் வரை, அரசு நிர்ணயித்த தொகையை விட 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.