பணத்திற்காக முதியவர் கட்டையால் அடித்து கொலை..மதுவுக்கு அடிமையான இளைஞர் வெறிச்செயல்..நாமக்கல் அருகே பரபரப்பு
ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வழக்கம் போல் தனது வீட்டின் வெளியே இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணி, கட்டையால் தலையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், இரவு நேரத்தில் வீட்டின் வெளியே சுப்பிரமணி உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது சட்டை பையில் இருந்து பணத்தை அருண்குமார் திருடிச் சென்று, மது அருந்தி வந்துள்ளார். இதேபோல், மீண்டும் பணத்தை திருடும்போது, அந்த இளைஞரை சுப்பிரமணி கையில் களவுமாக பிடித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க நினைத்த அருண்குமார், கட்டையால் தலையில் தாக்கியதில், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.