கண்ணிமைக்கும் நேரத்தில் ஒடிசா அமைச்சரை துளைத்த குண்டு.. பீறிட்ட ரத்தம் - நாட்டை உலுக்கிய பயங்கரம்

Update: 2023-01-30 07:36 GMT

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் முக்கிய தலைவர், சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ்.

புவனேஸ்வர் அடுத்த ஜார்சுகுடா மாவட்டம் பிரஜாராஜ் நகர் பகுதியில் மக்கள் குறைதீர்ப்பு அலுவலகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி விழாவிற்கு வந்தவருக்கு கட்சி தொண்டர்கள், உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

அதை ஏற்றுக்கொண்டு நபா தாஸ் காரிலிருந்து இறங்கியதும் துப்பாக்கி சூடு சத்தம் மக்களை கலங்க செய்தது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துப்பாக்கி சூட்டில் காயமடைய, அமைச்சர் மார்பில் ரத்தம் பீரிட சுருண்டு விழுந்தது பார்ப்போரை பதைபதைக்கச் செய்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரத்தில் சிக்கிய நபா தாசை கட்சி தொண்டர்கள் காரில் தூக்கி வைக்கும் காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர் ஜார்சுகுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது இடையே அவரை துப்பாக்கியால் சுட்டது பிரஜாராஜ் நகர் காவல் உதவி ஆய்வாளார் கோபால் தாஸ் என்பது தெரியவந்தது.

துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கேயே நின்ற அவரை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட முதல்வர் நவீன் பட்நாயக், கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கவும் உத்தரவிட்டார். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் நபா தாஸ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுகாதார அமைச்சரின் நெஞ்சை துளைத்து வெளியே வந்த துப்பாக்கி குண்டு அவரின் இதயம் மற்றும் இடது நுரையீரலில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதால், அதிக அளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதயத்துடிப்பை மீட்டெடுக்க முடியாததால் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், காவல் உதவி ஆய்வாளார் கோபால் தாஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் தெரியவரவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை தொடர்வதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்