நள்ளிரவில் வெட்டி கொல்லப்பட்ட கொத்தனார்...கள்ளச்சாரயத்தை காட்டி கொடுத்ததால் பயங்கரம்...
கொல்லப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசன்ன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தனபால். 32 வயதாகும் இவர் கொத்தனாராக வேலை செய்து வந்திருக்கிறார். தனபாலுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை உள்ளது.
சம்பவம் நடந்த அன்று நண்பருடன் டீ கடையில் நின்று பேசிக்கொண்டிருந்த தனபாலை பைக்கில் வந்திறங்கிய மர்ம கும்பல் ஒன்று வெட்டி வீசி விட்டு தப்பி சென்றிருக்கிறது.அந்த கொடூர தாக்குதலில் சரிந்து விழுந்த தனபாலை அக்கம்பக்கதினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் பாதி வழியிலேயே தனபாலின் உயிர் பிரிந்திருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஒருபுறம் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க போவதில்லை என கூறி தனபாலின் உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
இதனால் போலீசாரின் விசாரனை வேகமெடுத்திருக்கிறது. சிசிடிவி காட்சிகள் செல்போன் சிக்னல் போன்றவற்றின் உதவியோடு, தியாகராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுந்தர், அழகர், சாதிக் பாஷா, முருகேசன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் கொலைக்கான அனைத்து உண்மைகளும் வெளிவந்திருகிறது.
27 வயதான சுந்தர் ஏரியாவுக்குள் திருட்டுதனமாக சாராயம் விற்று கள்ளாகட்டி இருக்கிறார். ஊருக்குள் சாராய புழக்கம் அதிகமானதால் தனபாலும் அவரது மைத்துனரும் சேர்ந்து சுந்தரை போலீசில் காட்டி கொடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பான சுந்தர் அப்போதே தனபாலின் மைத்துனரை கத்தியால் வெட்டி இருக்கிறார். அந்த வழக்கில் போலீசார் சுந்தரை கைது செய்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள். சுமார் இரண்டு ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு சுந்தர் சமீபத்தில் தான் வெளியே வந்திருக்கிறார். தண்டனை காலம் முடிந்தும் கூட சுந்தரின் மனதில் இருந்த வன்மமும் கொலை வெறியும் குறையாமல் இருந்திருக்கிறது.
தன்னை சிறைக்கு அனுப்பிய தனபாலுக்கு பாலூற்ற கட்டம் கட்டி இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அழகர், சாதிக் பாஷா, முருகேசனை கூட்டு சேர்த்து கொண்டு தனபாலை சரமாரியாக வெட்டி சரித்தது விசாரனையில் உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சுந்தர், உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.நாட்டையே உலுக்கிய விழுப்புரம் கள்ளச்சாராய மரணங்களுக்கு பிறகு , கள்ளச்சாராயம் பற்றி துப்பு கொடுக்குமாறு காவல்துறையே கேட்டுகொண்ட நிலையில், இப்படி ஒரு மரணம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.