காவலர் தற்கொலை செய்ய போவதாக மிரட்டிய விவகாரம் - விசாரணை நடத்த சிறைத்துறை டிஐஜி உத்தரவு
மதுரை மத்திய சிறையில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய விவகாரம் குறித்து விசாரணை நடத்த டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.உசிலம்பட்டியை சேர்ந்த அறிவழகன் கடந்த ஜனவரி மாதம் சென்னை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், நிர்வாக காரணங்களுக்காக அப்போது, கொடைக்கானல் கிளைச்சிறைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு பணிகள் நடைபெறாததால் மீண்டும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும், பணிக்கு செல்லாமல் சிறைக்குள்ளேயே இருந்த அறிவழகனை, சிறை கண்காணிப்பாளர் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், தனக்கு வேறு சிறையில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அறிவழகன் மிரட்டியதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த டிஐஜி பழனி உத்தரவிட்டுள்ளார்.