"விழ விழ எழுவோம்.. சிகரம் தொடுவோம்" - உலகின் கண்கள் நாளை இந்தியா பக்கம்.. சந்திரயான் - 3 எனும் சரித்திர பயணம்

Update: 2023-07-13 09:08 GMT

நிலவில் தடம் பதிக்க தயார் நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலம், நாளை விண்ணில் பாய்கிறது...



விண்வெளியில் வியக்கத்தகு சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ, நிலவு குறித்த ஆய்வில் அதி தீவிரம் காட்டுகிறது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவில் கடந்த 2008 ஆம் ஆண்டே தடம் பதித்துவிட்டது இந்தியா... 2008 அக்டோபர் 22 ஆம் தேதி நிலவுக்கு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பி உலக நாடுகளை புருவத்தை உயர்த்தி பார்க்க செய்தது இஸ்ரோ...

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது சந்திரயான் 1...

தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் கனிமங்கள், ரசாயன கலவை, பவுதிக துகள்கள் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ, 2019 ஜூலை 22 ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. நிலவில் சவாலான பகுதியாக பார்க்கப்படும் எந்த நாடும் ஆராய்ச்சியில் இறங்காத தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டது.

பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக கடந்த சந்திரயான்-2 விண்கலத்திலிருந்த ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் சாப்ட் லேண்டிங் சவாலாக மாறியதால், வெற்றி கைகூடாமல் சென்றது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

தோல்வியில் துண்டுவிடாமல் தொடர்ந்து சந்திரயான்- 3 திட்டத்தில் கவனம் செலுத்தினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்... இதற்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிய, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இந்தியாவின் லட்சிய பயணம் நாளை மீண்டும் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:33 மணிக்கு விண்ணில் சீறி பாயவிருக்கிறது சந்திரயான்-3 விண்கலம்.

விண்வெளியில் 41 நாட்கள் வரையில் பயணம் செய்து, ஆகஸ்டு 23 அல்லது 24 ஆம் தேதி நிலவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்கலத்தை சுமந்துக் கொண்டு செல்லவிருக்கிறது இந்தியாவின் குண்டு பையன் என அறியப்படும் எல்.வி.எம் 3 ராக்கெட்.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 43.5 மீட்டர் நீளம், 640 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் தான், இப்போது எல்விஎம் 3 என அழைக்கப்படுகிறது. திட, திரவ, கிரையோஜெனிக் என மூன்றுநிலை எரிபொருளால் விண்ணில் பாயும் ராக்கெட், பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 6 டன்னுக்கும் அதிகமான எடையை எடுத்துச் செல்ல வல்லது.

இப்போது சந்திரயான்- 3 விண்கலத்தில் நிலவை சுற்றி வட்டமடிக்கும் ஆர்பிட்டர் இல்லை. தரையிறங்கி ஆய்வு செய்யும் லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும் ரோவரும் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ராக்கெட் ஏவுதலின் போது எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில், கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக எரிபொருளும் சேர்க்கப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. லேண்டர் தொடர்ந்து இயங்க உதவியாக, பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த முறை கனநொடியில் வெற்றி கைத்தவறிய சூழலில், இம்முறை நிலவில் சந்திராயன் 3 இமாலய சாதனையை தனதாக்கும் என்பது அனைவரது நம்பிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்