வயலினை பேச வைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்..! - மறக்க முடியுமா மருதமலை மாமணி பாடலை..?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்னக்குடியில், 1935ல் பிறந்த குன்னக்குடி வைத்தியநாதன், தம் தந்தையிடம் இருந்து கர்நாடக இசை மற்றும் பல்வேறு வாத்தியங்களை இசைக்க பயிற்சி பெற்றார். 12 வயதில் இருந்து இசைக் கச்சேரிகளில் பங்கு பெறத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி வைத்தியநாதன் பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். அரியகுடி ராமானுஜ ஐய்யங்காரின் இசைக் கச்சேரியில் முதல் முறையாக பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்.
தவில் வித்துவான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து சுமார் 3,000 கச்சேரிகளை அரங்கேற்றியுள்ளார். 22 திரைபடங்களுக்கு இசையமைத்துள்ள குன்னக்குடி வைத்தியநாதன், பறவைகள் மற்றும் மிருகங்களின் ஓசை களையும் வயலினில் வாசித்துள்ளார்.
தெய்வம் படத்தில் இவரின் இசையில் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகையா பாடல் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.