வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், "மக்களோடு மய்யம்" என்ற ஒரு நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். இதில், கட்சியினர், மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, அவற்றை வாக்குறுதியாக அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். கோவையில் கமலஹாசன் ஏற்கெனவே போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு கூறினார்.