வீட்டில் தூக்கில் தொங்கிய கணவன்...கணவரை கொன்று நாடமாடிய மனைவி...

Update: 2023-07-04 16:19 GMT

தேனி மாவட்டத்தில் உள்ளது கணேசபுரம் கிராமம். அந்த கிராமத்தின் அதிகாலை அன்று ஒப்பாரியோடு தொடங்கியிருக்கிறது. அந்த மரண ஓலத்தின் சொந்தக்காரர், இதே ஊரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி போதுமணி. இரவு நன்றாக பேசிவிட்டு தூங்க சென்ற கணவன் காலையில் தூக்கில் சடலமாக தொங்கினால் எந்த மனைவியால் அதை தாங்கி கொள்ள முடியும். போதுமணியின் அழுகை ஒட்டு மொத்த ஊரையுமே உச்சு கொட்ட வைத்திருக்கிறது. விவசாயியான பாலமுருகன் போதுமணி தம்பதிக்கு, திருமணமான ஒரு மகளும், திருமண வயதில் சூர்யா, சுகன் என்ற மகன்களும் உள்ளனர். குடிக்கு அடிமையான பாலமுருகன் போதையில் தற்கொலை செய்து கொண்டதாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.செய்தி அறிந்த கண்டமனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்கொலையென வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று நினைத்த போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். குடிக்கதா நாளில்லை, வாக்குவாதம் செய்யாத ஆள் இல்லையென பாலமுருகனின் நடத்தையை ஊருக்குள் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.அதோடு பாலமுருகனால் போதும்மணி பட்ட கஷ்டங்களையும், அந்த குடும்பம் அனுபவித்த வேதனைகளையும் கதை கதையாய் ஊர்மக்கள் கூறியிருக்கிறார்கள். நிச்சயம் அது தற்கொலையாக தான் இருக்கும் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் பாலமுருகனின் உடற்கூறாய்வு அறிக்கை அனைவரின் எண்ணத்தையும் அப்படியே தலைகீழாக மாற்றி போட்டிருக்கிறது. ஆம்... பாலமுருகன் தற்கொலை செய்யவில்லை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கிறார்.

நிச்சயம் பாலமுருகனை வெளியாட்கள் கொன்றிருக்க வாய்பில்லை, அவரது குடும்பத்தினர் தான் இந்த பயங்கரத்தை செய்திருப்பார்கள் என்று போலீசார் நம்பியிருக்கிறார்கள். உடனே விசாரணையின் போக்கு மாறியிருக்கிறது. போதுமணி, சூர்யா, சுகன் மூவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். எல்லா கேள்விகளுக்கும் மூவரும் முன்னுக்கு பின் முரணாகவே பதிலளித்திருக்கிறார்கள். இறுதியில் போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்த போது தான் நடந்திருப்பது திட்டமிட்ட படுகொலை என்று தெரிய வந்திருக்கிறது. ஆம்... பாலமுருகனை கொன்றது அவரது மனைவியும் மகன்களும் தான். கொலைக்கு காரணம் மது பழக்கம்! மதுவுக்கு அடிமையான பாலமுருகன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி போதுமணியிடமும் மகன்களிடமும் தகராறு செய்து வந்திருக்கிறார். மகன்கள் பாலமுருகனை பலமுறை கண்டித்தும் அவர் மதுப்பழக்கத்தை கைவிடுவதாக இல்லை. குடும்பத்தினரோடு தகராறு செய்வதையும் நிறுத்தவில்லை.

பாலமுருகனுக்கு பயந்து தாயை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு போக கூட மகன்கள் பயந்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் பாலமுருகனின் தொல்லையும் எல்லை மீறியிருக்கிறது. இதனால் அவர் மீது ஒட்டு மொத்த குடும்பத்துக்கு கொலைவெறி உருவாகியிருக்கிறது. சம்பவதன்று இரவு வழக்கம்போல் பாலமுருகன் மது குடித்து விட்டு வந்து மனைவி, மகன்களிடம் தகராறு செய்திருக்கிறார். காலம் முழுக்கு இந்த கஷ்டத்தை தங்களால் தாங்க முடியாதென முடிவெடுத்த சூர்யாவும் சுகனும் தந்தையோடு வாக்குவாததில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிவிடவே பாலமுருகனை தந்தை என்றும் பாராமல் கீழே தள்ளி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, சடலத்தை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள்.

பொழுது விடிந்ததும் ஒன்றும் தெரியாதது போல் பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பமே சேர்ந்து நாடகமாடியிருக்கிறது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் வேஷம் வெளுத்துவிடவே, கொலை வழக்கு பதிவு செய்த கண்டமனூர் போலீசார் பாலமுருகனின் மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். மது பழக்கத்தால் பாலமுருகன் சீரழிந்தது பத்தாது என்று, தற்போது அவரது ஒட்டு மொத்த குடும்பமும் அதன் மோசமான விளைவை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்