சிறுமிக்கு பாலியல் தொல்லை... பேக்கரி ஓனரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு... - இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அதிரடி கைது
சிவகங்கை மாவட்டம், கல்லலில், பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 லட்ச ரூபாய் பறித்த வழக்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கல்லலில் பேக்கரி நடத்தி வந்த நாச்சியப்பன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் உறவினர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து நாச்சியப்பனை மிரட்டி, சிலர் அவரிடமிருந்து 50 லட்ச ரூபாய் பணம் பறித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரனைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி, சிறுமியின் தாயாரும், உயிரிழந்த நாச்சியப்பனின் மனைவியும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த 2 வழக்குகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சிபிசிஐடி காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி விசாரனை நடத்திய சிபிசிஐடி போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் குனாளன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.