உலகக்கோப்பை கால்பந்து போட்டி... இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
தோஹாவில் உள்ள அல்பைட் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி வீரர் சொளமெனி 17- வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹேரி கேன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இந்த சூழலில் ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஒலிவர் கிரெளடு இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்திலும், பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம், இங்கிலாந்து அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.