சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம்...1.5 கோடி சொத்தை சுருட்டிய பலே கில்லாடி...

Update: 2023-07-20 16:37 GMT

ஆந்திரா, குப்பம்

உயிரோடு இருக்கும் மனைவிக்கு இறப்புச் சான்றிதழ்...

இறந்து போன கணவன் பெயரில் நடந்த மோசடி...

சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம்...

1.5 கோடி சொத்தை சுருட்டிய பலே கில்லாடி...

6 மாசத்துக்கு முன்னால இறந்து போன மனைவி தன்னோட சொத்த விக்கிறதுக்காக ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு போயிருக்காங்க.

ஆனா, ஏற்கனவே 2 வருசத்துக்கு முன்னால இறந்து போன கணவர் அந்த சொத்த வேறு ஒரு நபருக்கு வித்துட்டதா சொல்லி இருக்காங்க. இறந்து போனவர் உயிரோட இருக்குறவங்களுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கினது எப்படி?

ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம்.

தனது பெயரில் இருக்கும் சொத்தை விற்பனை செய்வதற்காக , பத்திரத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறார் இந்த பெண்.

ஆவணங்களை பார்த்ததும் சார்பதிவாளர் கேட்ட முதல் கேள்வி அவரை அதிர்சியில் உறைய வைத்திருக்கிறது.

''நீங்க தான் 6 மாசத்துக்கு முன்னவே இறந்துட்டீங்களே'' என்ற சார்பதிவாளரின் கேள்விக்கு, அவர் கண் முன் உயிரோடு நின்று கொண்டிருந்த பெண் அதிர்சியடைந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஒருவழியாக அந்த பெண் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள், அடுத்த குண்டை தூக்கி போட்டார் சார்பதிவாளர்.

அந்த பெண் இறந்துவிட்டதாக ஆவணங்களை கொடுத்தது 2 வருடங்களுக்கு முன் இறந்து போன அவரது கணவர் தானாம்.

கேட்பதுக்கு ஹாரர் ஸ்டோரி போல தெரிந்தாலும், உண்மையில் இது ஒரு 420 கும்பல் நடந்திய பக்கா மோசடி கதை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரது கணவர் ரவி வர்மா. இவர்களுக்கு சொந்தமாக குப்பம் பகுதியில் நிலமும் ஒரு வீடும் உள்ளது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 1.5 கோடி.

இந்த நிலையில் தான் பலரது வாழ்கையும் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், காஞ்சனாவின் வாழ்க்கையையும் தடம்புரல செய்திருக்கிறது.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட காஞ்சனாவின் கணவர் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார். கணவரை இழந்த காஞ்சனா கடந்த இரண்டு வருடங்களாக ஆம்பூரில் தனது உறவினர்களின் துணையோடு வசித்து வந்திருகிறார்.

இனிமேல் ஆந்திராவுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்பதால், அங்கு இருக்கும் தனது கணவரின் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிடலாமென முடிவு செய்திருக்கிறார் காஞ்சனா.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இடத்துக்கு நல்ல விலை கேட்டு வந்த ஒரு பார்ட்டிக்கு சொத்துக்கள் அனைத்தையும் விலை பேசி முடித்திருக்கிறார்.

கூட்டி கழித்துப்பார்த்து டீல் ஓகே ஆன பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் காஞ்சனா.

சம்பவம் நடந்த அன்று சொத்துக்களை வாங்கிவரின் பேரில் பத்திரபதிவு செய்து கொடுப்பதற்காக, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார் காஞ்சனா. அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

காஞ்சனா விற்பனை செய்ய வந்த எந்த சொத்துக்களும் அவரது பெயரில் இல்லை. அவை அனைத்தும் ஏற்கனவே விற்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அலுவலகத்திலிருந்த ஆவணங்களை சரிபார்த்த போது தான், ஒரு மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

உயிரோடு இருந்த காஞ்சனாவை இறந்துவிட்டதாச் சொல்லி ஒரு போலியான சான்றிதழ்களை தயாரித்த மர்ம நபர், அதை வைத்துக் கொண்டு காஞ்சனாவின் கணவர் ரவி வர்மாவை போல சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த காஞ்சனாவும் அவரது உறவினர்களும் , சார்பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், காஞ்சனாவின் ஊரை சேர்ந்தவர்களே இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

10 நாட்களுக்குள் இந்த பிரச்சனையை கண்டுபிடித்து சரி செய்துவிடுவதாக அதிகாரிகள் வாக்கு கொடுத்ததை அடுத்து காஞ்சனா அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை அபேஸ் செய்தது மட்டுமல்லாமல் உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக ஆவணமே தயாரிக்கும் அளவுக்கு துணிந்த அந்த மோசடி நபரை தற்போது தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்