ஏர் இந்தியா விமானம் AI -112 லண்டனில் இருந்து காலை 6 மணிக்கு டெல்லி சென்றடைய திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. இதனிடையே விமானி தமது பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி, மேற்கொண்டு விமானத்தை இயக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா மற்றும் எம்பி ராஜ்ய வர்தன் ரத்தோர் ஆகியோரை இணைத்து ட்வீட் செய்தனர். இதற்குப் பதிலளித்த ஏர் இந்தியா, விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தது. இருப்பினும், இதையும் மீறி, ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் அவதிப்பட்டனர். பின்னர் ஏர் இந்தியா சில பயணிகளை வால்வோ பேருந்திலும், சிலரை வாடகை வண்டிகளிலும் டெல்லிக்கு அனுப்பியது. அவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை விமான நிலைய நிர்வாகம் செய்து கொடுத்தது.