#மறக்குமா_நெஞ்சம்: RCB-னு பெயரை சொன்னாலே பொளந்து கட்டும் 'தல' தோனி.. அந்த மரண அடிகள்.. திக்..திக்.. நொடிகள்

Update: 2023-04-17 03:43 GMT

ஐபிஎல் தொடரில் சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டாப்-5 போட்டிகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஐபிஎல் தொடரில் மும்பைக்கு அடுத்தபடியாக சென்னையுடன் மல்லுக்கட்டும் அணியாக பெங்களூருவை சொல்லலாம்.... இரு அணிகளுக்கும் இடையே பல சுவாரஸ்யமான போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் ஒன்றுதான் 2011ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி...

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூருவுடன் மோதிய சென்னை, முரளி விஜயின் சரவெடி ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கைத் துரத்திய பெங்களூரு, 147 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்று, 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

2009ம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 129 ரன்களுக்கு சுருண்டது. ஹெய்டன் மட்டும் அரைசதம் அடித்தார். பின்னர் சுலபமான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரின் 4வது பந்தில் இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது.

2018ம் ஆண்டு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணியில் முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கேப்டன் தோனி-ராயுடு ஜோடி கைகோர்த்து அணியை மீட்டது. 82 ரன்களில் ராயுடு ஆட்டமிழக்க, மிரட்டலான சிக்சர்களால் பெங்களூருவைப் புரட்டிப்போட்ட தோனி, கடைசி ஓவரில் சிக்சருடன் தனது பாணியில் ஆட்டத்தை ஃபினிஷ் செய்தார்.

2019ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங்கின் மந்திரச் சுழலை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 70 ரன்களுக்குள் அடங்கியது ஆர்.சி.பி... இலக்கு குறைவுதான் என்றாலும், ஆடுகளத்தின் மந்தத் தன்மையால் 18வது ஓவரில்தான் சென்னையால் இலக்கை எட்ட முடிந்தது. இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

அதே 2019ம் ஆண்டு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு 161 ரன்கள் எடுத்தது. பார்திவ் படேல் மட்டும் அரைசதம் அடித்தார். 162 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் முன்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கடைசி வரை தோனி மட்டும் போராடிய இந்தப் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு...


Tags:    

மேலும் செய்திகள்