1,500 பேரை காவு வாங்கிய ’திகில்’ ஆழம்... பேரழிவை பார்க்க ஒரு திக் திக் பயணம்

Update: 2023-06-21 12:21 GMT

1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி சென்ற போது விபத்தில் சிக்கி, அட்லாண்டிக் கடலில் ஜலசமாதியான டைட்டானிக் கப்பல் சிதைவுகளாக காட்சியளிக்கிறது....1,500 பேர் உயிரை குடித்த வரலாற்றின் மோசமான கடல் விபத்தாக அறியப்படும் விபத்து அது... பேரழிவில் சிக்கிய டைட்டானிக் வரலாற்று நினைவை சுமந்து கொண்டே வருகிறது.டைட்டானிக் கப்பல் குறித்த தகவலை அறிய இன்றுவரையில் ஆர்வம் குறைந்தபாடில்லை... 1985 ஆம் ஆண்டு கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிகப்பட்டதிலிருந்து, கப்பல் குறித்த ஆராய்ச்சி தொடர்கிறது.இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் விண்வெளி சுற்றுலாவே தொடங்கிவிட்ட சூழலில், அமெரிக்காவை சேர்ந்த ஓஷன்கேட் நிறுவனம் ஆழ்கடலில் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை காணும் சுற்றுலாவை அறிவித்தது. அவ்வளவு ஆழத்திற்கு எப்படி மக்களை அழைத்துச் செல்ல முடியும் என்ற கேள்விக்கு பதிலாக, தயாரிக்கப்பட்டதுதான் டைட்டானிக் நீர்மூழ்கி....

டைட்டானிக் சிதைவுகள் 12 ஆயிரத்து 400 அடி ஆழத்தில் கிடக்கின்றன. அமெரிக்காவின் டால்பின் நீர்மூழ்கி செல்லும் அதிகபட்ச ஆழமே 900 அடியாகும். ஆனால் தங்களுடைய டைட்டானிக் நீர்மூழ்கியால் 13 ஆயிரத்து 100 அடி வரையில் செல்லலாம் என்றது ஓஷன்கேட்... கார்பன்-ஃபைபரால் தயாரிக்கப்பட்ட டைட்டானிக் நீர்மூழ்கி 10 ஆயிரத்து 432 கிலோ எடையை கொண்டது. அதிலிருக்கும் கேப்சூலில் நீர்மூழ்கியை இயக்குபவர் உள்பட 5 பேர் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என ஓஷன்கேட் தெரிவிக்கிறது. நீர்மூழ்கியை உள்ளிருக்கும் கேப்டனும், கடலுக்கு மேற்பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவரும் இயக்கலாம். கேமராக்கள், கடலை பார்க்க பிரத்யேக திரையை கொண்ட டைட்டானிக் நீர்மூழ்கி பேட்டரி மின்சாரத்தில் இயங்குவது. மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் 4 மின்சார உந்துதல்களை கொண்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வோர்க் சிஸ்டம் வாயிலாக இணைப்பை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் டைட்டானிக் சிதைவுகளை கண்டு திரும்ப தலைக்கு 2 கோடி ரூபாய் கட்டணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி கட்டணம் செலுத்தியவர்கள், செளத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் கடலில் சிதைவுகள் கிடக்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்து டைட்டானிக் நீர்மூழ்கியில் ஆழ்கடலுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஓஷன்கேட் சி.இ.ஓ. ஸ்டோக்கன் ருஷ் உள்பட 5 கோடீஸ்வரர்கள் நீர்மூழ்கியில் கடலுக்குள் சென்றுள்ளனர் நீர்மூழ்கி கடலுக்குள் சென்ற 2 மணி நேரத்திற்குள் மேல் பரப்பிலிருந்த கப்பலுடன் தொடர்பை இழந்துள்ளது. உடனடியாக அமெரிக்க, கனடா பாதுகாப்பு படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை, தனியார் நிறுவனங்கள் நீர்மூழ்கியை கண்டுபிடிக்கும் பணியை தொடங்கியது. இதற்கிடையே டைட்டானிக் நீர்மூழ்கியின் பாதுகாப்பு கட்டமைப்பு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தொழில்நுட்ப வசதியும் சொல்லும்படியாக இல்லாது, ஆபத்து காலங்களில் வெளியேற எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாத ரிமோர்ட் வாயிலாக இயக்கப்படும் நீர்மூழ்கியில் மனிதர்கள் கடலுக்குள் அனுப்பியது எப்படி என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை காலையுடன் நீர்மூழ்கியில் ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்ற சூழலில், சோனார், ரோபோக்களை கொண்டு கடலுக்குள் நீர்மூழ்கியை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் கப்பலை பார்க்க சென்றவர்கள் மாயமானது அமானுஷ்யமாகியிருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்