டெல்லி மாநகராட்சியின் தேர்தலில் பாஜக தோல்வியுற்றதை அடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகியுள்ளார். 15 ஆண்டுகளாக பாஜக வசமிருந்த டெல்லி மாநகராட்சியை அண்மையில் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மியும், 104 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தன. ஏற்கனவே சண்டிகரிலும் இதே போல் பாஜகவை விட அதிக வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்த நிலையில், மேயர் பதவியை பாஜக கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், டெல்லியிலும் மேயர் பதவியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டும் என பேசப்பட்டு வந்தது. ஆனால் டெல்லி மாநகராட்சியின் மேயர் பதவியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்றும் தாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், டெல்லி மாநில பாஜக தலைவர் பொறுப்புகளை அம்மாநில துணை தலைவர் வீரேந்திர சச்தேவா கவனிப்பார் என பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.