அறப்போர் இயக்கத்திற்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கு வாபஸ்

Update: 2022-10-12 07:42 GMT

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. சென்னை, கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ஃப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைதளங்களிலும் பதிவேற்றப்பட்டன. இதற்கிடையே, அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் சார்பில் 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்