தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி - தேதி மாற்றம்?

Update: 2022-12-31 07:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 2ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி தேதி மாற்றம் செய்யபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 1ம் தேதி அல்லது 2ம் தேதி நடைபெறுவது வழக்கம். அங்குள்ள அந்தோணியார் கோயிலின் திருவிழாவிற்காக ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறும். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான வழக்கு நிலுவையில் இருந்தாலும் இந்த ஆண்டு வழக்கம் போல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது. தச்சங்குறிச்சியில் வரும் 2ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன்படி, விழா ஏற்பாடுகள் நடைபெறுவதற்கு 1 மாதத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வழங்க வேண்டும், ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும், அனுமதி டோக்கன் கண்டிப்பாக பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து வரும் 2ம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தச்சங்குறிச்சியில் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது. 2ம் தேதி அனுமதி கிடைக்கவில்லை என்றால் வரும் 6ம் தேதி ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு விழா ஏற்பட்டார்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கினால் மட்டுமே 6ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்