தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக தென்னங்கள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இவரது தோட்டத்திற்கு கள் குடிக்க சென்ற காளியூரைச் சேர்ந்த ஆதிவாசி இன இளைஞர் ஜெயக்குமார் போதை தலைக்கேறியதால் அங்கேயே படுத்துள்ளார்... அவரது நண்பர்கள் மட்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் குப்புசாமி தன் தோட்டத்தில் மின்வேலி அமைத்துள்ள நிலையில், போதை தெளிந்த ஜெயக்குமார் தன் பைக்கில் குப்புசாமி தோட்டத்தின் வழியே வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார். எதிர்பாராத விதமாக ஜெயக்குமார் அந்த மின்வேலியில் விழுந்த நிலையில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காரமடை போலீசார் குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.