உ.பி.யை கலக்கிய குழந்தை திருட்டு கும்பல்.. மிகப்பெரிய திருட்டு நெட்வொர்க்...!

Update: 2023-05-27 14:15 GMT

நள்ளிரவில் சாலையோரம் தாய்-தந்தைக்கு மத்தியில் அயர்ந்து தூங்கிய குழந்தையை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் செல்லும் இந்த சிசிடிவி காட்சி உத்தரபிரதேசத்தையே உலுக்கியது. காலையில் விளித்து பார்த்த போது குழந்தையை காணாத தம்பதியினர், வாரணாசியின் பேலுபூர் பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.

குழந்தை கிடைக்காத நிலையில் காவல் நிலையத்திற்கு சென்ற அவர்களிடம், குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருக்கும் தமிழரான ஏசிபி சரவணன் நேரடியாக விசாரணையை நடத்தினார். அவர்கள் கூறியதை கேட்டு உடனடியாக குழந்தையை தேடும் பணியை முடுக்கிவிட்டவர், பேலுபூர் பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். சிசிடிவியில் குழந்தைகளை தூக்கியவர்கள் ஒரு காரில் செல்லும் காட்சிகள் இருந்ததும், காரை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டது. அப்போது குழந்தையை தூக்கியவர்கள் போலீசில் சிக்கவே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை இறுதியில் ஷிக்கா எனும் பெண் தலைமையில் பெரிய குழந்தை திருட்டு கும்பல் இயங்குவது கண்டுபிடிக் கப்பட்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 மாத குழந்தை உட்பட 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. ஏசிபி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் படை புலனாய்வை தொடங்கியது. விசாரணையில் குழந்தை திருட்டு கும்பல் உத்தரபிரதேசம் மட்டுமின்றி ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகாரிலும் கிளை வைத்து இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை கடத்தி விற்கும் இந்த கும்பல், ஆண் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய் வரை விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக குழந்தை திருட்டு கும்பலை சேர்ந்தவர்களை சரவணன் டீம் தட்டி தூக்கியது. இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த 10 பேர் சிக்கினர். அவர்கள் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை திருடியதும் தெரியவந்துள்ளது.யாரெல்லாம் காவல் நிலையத்திற்கு செல்ல மாட்டார்கள் என கணக்கு வைத்து குழந்தை திருட்டு கும்பல் கைவரிசையை காட்டியிருக்கிறது. வீடு இல்லாமல் சாலையில் வசிப்பவர்கள், அடையாள அட்டைகள் இல்லாதோரை குறிவைத்திருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

விசாரணை விஸ்தரிக்கப்பட்டிருக்கும் சூழலில் பிற குழந்தைகளையும் மீட்கும் பணியை அம்மாநில போலீஸ் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஏசிபி சரவணன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 2019 பேட்ச் உத்தரபிரதேச அதிகாரி... இந்தியாவின் மிகப்பெரிய குழந்தை கடத்தல் நெட்வொர்க்கை சிக்க வைத்த அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்