அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு... உயர் நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-07-15 02:54 GMT

அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் வன்முறை சம்பவம் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. கலவரம் ஏற்பட்ட போது தடுக்காமல் காவல்துறை அமைதி காத்ததாகவும், வீடியோ ஆதாரமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்தை சீல் வைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் வாதிடப்பட்டது. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியுள்ளார். பொருளாளர் என்ற முறையில் அலுவலகம் சென்றதாகவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடந்த 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

 

 

 

Tags:    

மேலும் செய்திகள்