ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த சடலம்...கஞ்சா தொழில் போட்டியால் பயங்கரம்...

Update: 2023-07-08 23:30 GMT

பரபரப்புக்கு பஞ்சமில்லாதது ராணிப்பேட்டை சோளிங்கர் ரயில் நிலையம். அன்று அங்கு வந்த பயணிகள் எல்லாம் பயத்தில் உறைந்து நிற்க காரணம், அடையாளம் தெரியாத நிலையில் தண்டவாளத்தில் கிடந்த ஒரு ஆண் சடலம். தலையில் வெட்டு காயங்களுடன் கிடந்த சடலத்தை பார்த்தவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காட்பாடி ரயில்வே போலீசாரும், சோளிங்கர் காவல்நிலைய போலீசரும் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர். சடலத்தை கை பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனை அனுப்பி வைத்த போலிசார், கொல்லப்பட்டவர் யார், இந்த கொடூரத்தை செய்த கொலையாளிகள் யார் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்திருப்பது ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வண்டு ராஜேஷ் என்பது தெரிய வந்திருக்கிறது. 30 வயதான ராஜேஷ் ராணிப்பேட்டையில் கடை வைத்து நடத்தி வந்திருகிறார்.அடை மொழியை வைத்து வண்டு ராஜேஷை காமெடி பீஸாக கருதிவிட வேண்டாம். ராணிப்பேட்டை பகுதியின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தான் இந்த வண்டு ராஜேஷ். கொலை, கொள்ளை, வழிப்பறி அடிதடி கட்டப்பஞ்சாயத்து இப்படி அவர் மீது பல வழக்கு இருந்தாலும் வண்டு ராஜேஷின் முக்கியமான தொழில் கஞ்சா சப்ளை.கடந்த ஆண்டு ஜுலை மாதம் சரத்குமார் என்பவரை வெட்டி கொன்ற வழக்கில் வண்டு ராஜேஷ் முக்கிய குற்றவாளி. அந்த வழக்குக்காக கோர்டில் ஆஜராக வந்தபோது தான் வண்டு ராஜேஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.

ராஜேஷூக்கு எல்லாதரப்பிலும் எதிரிகள் இருந்ததாலும் நிச்சயம் இது முன் விரோதத்தால் நடந்த கொலை தான் என்று போலீசார் உறுதியாக நம்பியிருக்கிறார்கள். கொலை நடந்திருக்கும் ரயில்வே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்திருக்கிறார்கள். சந்தேகிக்கும்படியான 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிக்கியிருக்கிறது. உடனே போலீசார் அந்த கும்பலை தேடி பிடித்திருக்கிறார்கள்.காவல் துறையின் சந்தேகம் வீன் போகவில்லை. அந்த கும்பல் தான் வண்டு ராஜேஷை வெட்டி சிதைத்திருக்கிறது. அவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் கொலைக்கான பகீர் காரணம் தெரிய வந்திருக்கிறது. ராணிப்பேட்டையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை தான் இந்த கொலைக்கு முதல் காரணம்.இரயில் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சா, ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளுக்கு எற்றபடி தரம் பிரித்து அனுப்பபடுவது வழக்கம்.

அப்படி இறக்கப்படும் கஞ்சாவை பிரிப்பதில், பாணாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமாருக்கும் ராஜேஷுக்கும் விரோதம் ஏற்பட்டிருக்கிறது. கஞ்சா விற்பனையில் தனக்கு இடையூராக இருந்த சரத்குமாரை தீர்த்துகட்ட நினைத்திருகிறார் ராஜேஷ் . அதன்படி கடந்த ஆண்டு ஜுலை 10 ஆம் தேதி ராஜேஷ் தனது கூட்டாளிகளின் உதவியோடு, சரத்குமாரை கை கால் தலையென தனித்தனியாக வெட்டி கொலை செய்திருக்கிறார். சரத்குமாரின் ஆட்கள் அவரது கொலைக்கு பழி தீர்க்க காத்திருந்தனர். இந்த சூழலில் தான் அந்த கொலை வழக்கில் ஆஜராக வண்டு ராஜேஷ் கோர்டுக்கு வரும் தகவல் சரத்குமாரின் ஆட்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

உடனே ராஜேஷூக்கு ஸ்கெட்ச் போட்டு அவரை தீர்த்து கட்டியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பா வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள். ராணிப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் கஞ்சா சப்ளை கும்பல்களிடையே நிலவும் தொழில் போட்டியின் காரணமாக, இந்த பகுதியில் அடிக்கடி கொலை நடந்து வருகின்றது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்