ஏசி வைத்து கஞ்சா செடி வளர்த்த கும்பல்.. 'கஞ்சா.. கிரிப்டோ.. டிரேடிங்' என சொகுசு சென்னையில் கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்
- விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் விஜய்சேதுபதி, வீட்டினுள் சூரிய ஓளி படாமல் கஞ்சா செடிகளை வளர்த்து கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் விற்பனை செய்து வில்லத்தனம் காட்டியிருப்பார்.
- அந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் வீட்டினுள் கட்டமைக்கப்பட்டிருந்த ஆய்வகத்தில், ஒரு கும்பலே அறிவியலாளர்கள் போல கஞ்சாவை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள்.
- இவ்வாறு ரீல் வாழ்க்கையில் காண்பது போல், ஒரு கும்பல் பொறியாளர் ஒருவரை தலைமையாக கொண்டு ரியல் வாழ்க்கையில் கஞ்சா தயாரித்து வந்துள்ளது.
- அந்த கும்பலை...விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் வீட்டை அடியோடு அழித்து தரைமட்டமாக்குவது போல, இந்த கும்பலையும் போலீசார் கூண்டோடு பிடித்து அவர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
- கிரிப்டோகரன்சி மூலமாக டார்க் வெப்சைட்டில் உபகரணங்களை வாங்கி, வீட்டினுள் சூரிய ஒளி படாமல் ஆய்வகத்தில் வைத்து பிரத்யேகமாக கஞ்சா தயாரித்து வந்திருக்கிறது கும்பல்...
- சென்னையில் உள்ள ரிசார்டுகள், பப்புகள் போன்ற கேளிக்கை விடுதிகளில் விலையுயர்ந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது...
- இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த கும்பலை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.
- இதில், சக்திவேல், சியாம் சுந்தர், ஸ்ரீகாந்த், நரேந்திரகுமார் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- இதில், சாப்ட்வேர் இன்ஜினியரான சக்திவேல் இணையதளம் பற்றிய நன்கு அறிந்திருந்த நிலையில், சம்பாதித்த பணம் முழுவதையும் கிரிப்டோகரன்சியாக மாற்றி டிரேடிங் பிஸ்னஸ் செய்து வந்துள்ளார்.
- இதில், நஷ்டமடைந்த நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்த சக்திவேல், யூடியூப் மூலமாக கஞ்சா வளர்ப்பு குறித்து தொடர்ச்சியாக வீடியோக்களை பார்த்து வந்திருக்கிறார்.
- இதையடுத்து, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கஞ்சா வளர்க்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் விதைகளை கிரிப்டோகரன்சி மூலமாக டார்க் வெப்சைட்டில் கொரியர் மூலமாக வாங்கியிருக்கிறார் சக்திவேல்...
- இதற்காகவே மாடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வீட்டிலேயே விலையுயர்ந்த கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார்.
- அங்கு, சூரிய ஒளிபடாமல் கஞ்சா செடி வளர்த்து, ஆய்வகம் போல அமைத்து கஞ்சாவை உலரவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது...
- இதில், போதை ஸ்டாம்புகளையும் தயாரித்து அனைத்தையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்திருக்கிறார் சக்திவேல்... இந்த ஆன்லைன் விற்பனைக்காக ரயில்வே ஊழியர் சியாம் சுந்தர், நரேந்திரகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
- குறிப்பாக ஒரு கிராம் கஞ்சாவை 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், கேளிக்கை விடுதிகளிலும் விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- இவ்வாறு 4 வருடமாக வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் தற்போது கூண்டோடு பிடித்துள்ளனர். இதில், 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், 356 போதை ஸ்டாம்புகள் மற்றும் 3கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில், சக்திவேலின் வீட்டிற்கு கும்பலை அழைத்து சென்று நேரில் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.