பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு வேக வேகமாக ஓடி காவல்துறை வாகனத்தில் ஏறி அமர்ந்திருக்கும் இந்த பூபோட்ட சுடிதார் தான், திருமணம் ஆகாத ஆண்களுக்கு மேட்ரிமோனியில் வலைவீசி பல லட்சங்களை சுருட்டிய கல்யாண ராணி சந்தியா.... டிபியில் நடிகையின் போட்டோ... ஆசை வலையில் சிக்கிய 90ஸ் கிட்ஸ்... அடுக்கடுக்கான ஏடிம் கார்டு.. அடங்காத சந்தியாவின் அதிரவைக்கும் பின்னணியை அறிய தொடங்கினோம்.
- "எப்ப தம்பி கல்யாண சாப்பாடு போட போறீங்க"
- "அண்ணனுக்கு முடிஞ்சிது அடுத்து உனக்கு தான்"
- "காலாகாலத்துல ஒரு கல்யாணத்து பண்ணுப்பா"
- "அட ஒரு கால் கட்டு போட்டா எல்லா சரி போய்டும்"
- "நாலு கழுத வயசாயிடுச்சி இன்னு கல்யாணம் காட்சி ஒன்னு இல்லையா.?"
25 வயதை கடந்த ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் எதிராக சமூகம் வைக்கும் கல்யாண கேள்விகள் தான் இவை. வெறுப்போடோ, சலிப்போடோ, விருப்பத்தோடோ, எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் புரோக்கர்களிடமும், மேட்ரிமோனியல் வெப்சைட்டிலும் ஜாதகத்துடன் போட்டோவை போட்டுவிட்டு நல்ல வரனுக்காக காத்திருக்கும் 90 களின் குழந்தைகள் ஏராளம். அந்த குழந்தைகளில் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த அசோக் சைதன்யா. 33 வயதாகும் இவர் சென்னை ஆவடி அடுத்துள்ள அயப்பாக்கத்தில் தங்கி ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் தான் திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த அசோக் சைதன்யாவுக்கு மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஷ்ரவண சந்தியா என்ற ஐடியில் இருந்து ஒரு ப்ரோபோசல் வந்திருக்கிறது. அந்த ஐடிக்குள் சென்று பார்த்ததும், அழகான தோற்றம், நடிகையை போல பொலிவு என டிபியில் இருந்த போட்டோவை பார்த்ததும் சொக்கி விழுந்திருக்கிறார் அசோக் சைதன்யா. அவ்வளவு தான் இவருக்கு அந்த பெண்ணின் மீது காதல் வர, திருமண பேச்சில் தொடங்கி, ஹனிமூன், குழந்தை , ஃபியூச்சர் ப்ளான் என 50 வருட திருமண வாழக்கையை போனிலேயே பேசி தீர்த்து, மனக்கோட்டை கட்டி இருக்கிறார். அந்த கோட்டையை கட்ட இவர் ஷ்ரவன சந்தியாவுக்கு கொடுத்த கூலி 9 லட்சம் பணம், 65 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போன்...
இத்தனை கொடுத்த பின்னும் ஒரு முறைகூட அசோக் சைதன்யா, ஷ்ரவன சந்தியாவை நேரில் சந்தித்தில்லை. மீட்டிங், டேட்டிங் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என கராராக மறுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம் ஏதேதோ காரணங்களை சொல்லி தவிர்த்து வந்திருக்கிறார் ஷ்ரவண சந்தியா. அசோக் சைதன்யாவின் திருமண பேச்சுகள் ஒருகட்டத்தில் நச்சரிப்பாக மாற, அவரின் நம்பரை ப்ளாக் செய்திருக்கிறார்.இதனால் சந்தேகமடைந்த அசோக் சைதன்யா, ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஷ்ரவண சந்தியா டிபியில் வைத்திருந்த போட்டோவை அடையாளம் காண வைத்து கொண்டு செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்திருக்கிறார்கள். அந்த தேடுதலில் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஷ்ரவண சந்தியாவை மடக்கி பிடித்திருக்கிறார்கள். அப்போது தான் போலீசாருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. டிபியில் இருந்தது ஷ்ரவன சந்தியாவின் புகைப்படம் அல்ல.... உண்மை முகத்தை மறைத்து ஆந்திராவை சேர்ந்த ஒரு மாடல் அழகியின் புகைப்படத்தை பயன்படுத்தியே மோசடிகளை செய்து வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மதனபள்ளிதான் ஷ்ரவண சந்தியாவின் சொந்த ஊர். 33 வயதாகும் இவர் பெங்களூருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கொண்டு மேட்ரிமோனியில் வரன் தேடும் ஆண்களின் ஐடிக்கு ப்ரோபோசல் கொடுத்து பேசி பழகுவது வழக்கம். மாடல் அழகியின் புகைப்படத்தை டிபியில் வைத்திருப்பதால், ஆண்களும் பார்த்த மறு நொடியே மயங்கி விழுந்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக பேசி பணத்தை சுருட்டி கொண்டு அவர்களை கழற்றி விட்டு அடுத்த ஆப்ரேஷனில் இறங்கி விடுவாராம். மேலும் பெங்களூரு விடுதியிலும் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்திருப்பது விசாரனையில் தெரிவந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு சிம் கார்டு, வேறு வேறு வங்கி கணக்கில் பரிவர்த்தனை என கிரிமினல் மைண்டுடன் யோசித்து மோசாடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.விசாரனையின் முடிவில் மோசடி ராணி ஷ்ரவண சந்தியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 1 மடிக்கணினி, 3 செல்போன், 6 சிம் கார்டு, 7 ஏடிஎம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி அவரின் 8 மின்னஞ்சலையும் ஒரு டெலகிராம் அக்கவுண்டையும் போலீசார் முடக்கி உள்ளனர். இன்னும் எத்தனை பேர் மோசடி சந்தியாவிடம் ஏமாந்து பணத்தை பறி கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.