சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, வரும் 15 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அம்மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை, ஆயிரமாக உயர்த்தி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுநீரகவியல் , இருதயவியல், சமையல் துறை மற்றும் நிர்வாகத்துறை என பல்வேறு துறைகளில், ஆட்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். ரெகுலர் முறையில் 249 பணியிடங்களையும், அவுட்சோசிங் முறையில் 508 பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருந்தாளுனர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை பணி நிரவல் அடிப்படையில் நிரப்பியது போக, கூடுதலாக 60 செவிலியர்கள் மற்றும் 30 உதவி பேராசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.