ஐகோர்ட்டில் எடுபடாத வாதம்.. அமலாக்கத்துறைக்கு பின்னடைவு - முதல் சுற்றில் வென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி

Update: 2023-06-16 08:16 GMT

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நீதிமன்றங்களில் நடந்தவையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாக அவரது மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுகுறித்த விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றபோது, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என மேகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், மருத்துவ அறிக்கையை சந்தேகிக்க முடியாது என கூறிய நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்தது. அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவக் குழு ஆராயலாம் எனக் கூறிய நீதிமன்றம், ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டதுடன் ஜூன் 22 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைத்தது...

15 நாட்கள் காவல் - அமலாக்கத்துறை மனு விசாரணை

முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணை

முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் - அமலாக்கத்துறை

காவலுக்கு செல்ல விருப்பம் இல்லை - செந்தில் பாலாஜி

15 நாட்கள் காவல் மனு - நீதிபதி அல்லி இன்று உத்தரவு

செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. பணி நியமனத்திற்கு பெறப்பட்ட முழு தொகை குறித்து உண்மை விபரங்களை கண்டறிய காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கூறியது. விசாரணையை தொடர்வதில், அமலாக்கதுறையினர் தடுக்கப்பட்டனர் என்றும், பணப் பரிமாற்றம் தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது.

காணொலியில் ஆஜரான செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை காவலுக்கு செல்ல விருப்பம் இல்லை என்றார். அமலாக்கத்துறை ஏற்கனவே 22 மணி நேரங்கள் விசாரித்திருக்கிறது என குறிப்பிட்ட செந்தில் பாலாஜி தரப்பு, அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் எனவும், உயர்நீதிமன்றமும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதி வழங்கியுள்ளது எனவும், அவரை காவலில் எடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க கோரிய மனுவில் இன்று உத்தரவிடுவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்... ஆம்புலன்ஸ் வாயிலாக காவேரி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்