புதுச்சேரியில் பல்வேறு கடற்கரைகளில் 4 நாட்கள் நடைபெறும் சித்திரை கடற்கரை திருவிழாவை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவையொட்டி படகுப்போட்டி, கடற்கரை விளையாட்டு உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி கடற்கரையை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் மணப்பட்டு ஏரியில் சுற்றுலா மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
100 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு விவகாரத்தின் தன் மீதும், தந்தை மீதும் அவதூறு பரப்பப்படுவதாக நயினார் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட அறப்போர் இயக்கம் மீது, அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறினார்.
அதிமுகவில் திருத்தப்பட்ட புதிய சட்டவிதிகளை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காவிட்டால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து காவலர் அளித்த தகவலின்படி, சந்தேகத்திற்கு இடமான இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்த போது, இந்த பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து அந்த இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.