NEXT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். இதனால் NEXT தேர்வு முறையை கைவிட்டு, தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும், முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்
மருத்துவ படிப்புக்கு பொது கலந்தாய்வு நடத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புக்கு பொது கலந்தாய்வு நடத்தப்படும் என தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்திருப்பது ஏற்புடையதல்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தற்போதுள்ள நடைமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரபிக்கடலில் உருவாகியுள்ள "பிபர்ஜாய்" புயல், குஜராத் - பாகிஸ்தான் இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் - ஜக்காவு துறைமுகத்துக்கு இடையே "பிப்பர்ஜாய்" புயல் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது.
கேரளாவில், ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 16ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊழல், திட்டங்களின் பிரச்னைகள்தான் முந்தைய அரசுகளின் அடையாளம் என விமர்சித்த பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சி, சமூக சீர்திருத்தம் போன்றவற்றிற்கு இந்தியா அங்கீகரிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, வேலை வாய்ப்பு முகாம்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக அரசின் புதிய அடையாளமாக மாறி இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.