9 நிமிடங்களில் 22 செய்திகள்...தந்தி இரவு செய்திகள்

Update: 2023-06-21 14:06 GMT

கருணாநிதி வழியில் ஜனநாயக போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் மெகா கூட்டத்தில், மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய கருணாநிதி பிரதிநிதியாக பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

சென்னை காவேரி மருத்துவமனையில், சுமார் 5 மணி நேர இருதய அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சை முடிந்தபின்பு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சைக்குப்பின் கண் விழித்து பார்த்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என பேரவையில் வெளியான அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 89 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், அடுத்த டிஜிபியை தேர்வு செய்வது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா உள்ளிட்டோருடன் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை நடத்துகிறது. இதில் இறுதி செய்யப்படும் மூன்று அதிகாரிகளில் ஒருவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவார்.

Tags:    

மேலும் செய்திகள்