150 பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வின்றி அங்கீகாரம் - அண்ணா பல்கலை. அறிவிப்பு
எவ்வித குறையுமின்றி இயங்கும் 150 பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வின்றி, ஆண்டுதோறும் உடனுக்குடன் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்தவுடன், அண்ணா பல்கலைக்கழக குழுவினர் நேரடியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையின் அடிப்படையில் இணைப்பு அங்கீகாரம் வழங்குவர். இந்நிலையில், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கக்கூடிய 150 பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வு இல்லாமல், இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையானது 2023-24 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வசதிகள் குறைவாகவும், குறைந்த மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளாகவும் இருந்தால் அந்த மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.