உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதி அருகில் தற்காலிக முகாம் அமைத்து அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில், சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்று 13-வது நாளாக நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு சுரங்கப்பாதை அருகிலேயே முதல்வர் புஷ்கர் சிங் தாமி தங்கியிருந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்நிலையில், உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாசியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில், மாத்தலி என்ற இடத்தில் தற்காலிக முகாம் அமைத்து, அங்கிருந்தபடி அரசுப் பணிகளை புஷ்கர் சிங் தாமி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும், சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கும் ஏதுவாக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை விரைவில் பத்திரமாக வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக, உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.