"விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம்" ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1996ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2000ஆம் ஆண்டில் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. ஆனால், அமெரிக்காவோ இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை. உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. உக்ரைன் போரில் அவர்கள் நேரடியாகத் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ரஷியா முடிவு செய்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவின் பொறுப்பற்ற அணுகுமுறை காரணமாக விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்திற்கு அளித்த அங்கீகாரத்தை ரஷ்யா திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டு ஒருமித்த கருத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்திற்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யும் சட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்... "விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தில்" இருந்து விலகுவது, ரஷ்யா அணுசக்தி சோதனைகளை நடத்தும் என்பதைக் குறிக்கவில்லை என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.