அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இருக்கும் பைடன், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் தடுமாறியதும் பைடனை நீக்க வேண்டும் என்ற கோஷம் சொந்த கட்சிக்குள் எதிரொலித்தது. ஆனால் விலகப்போவது இல்லை என்று பைடன் தீர்க்கமாக சொன்னார். அப்போது கட்சி உயர்மட்ட அளவில் பெரிய எதிர்ப்பு தென்படவில்லை. இதை தொடர்ந்து நேட்டோ மாநாட்டிலும் பைடன் சொதப்பியது கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் துப்பாக்கி சூடு சம்பவத்தை டிரம்ப் தனக்கு சாதகமாக்க, சில மாகாணங்களில் பைடன் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இந்த சூழலில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாக, அவரது உடல்நிலை, வயதை குறிப்பிட்டு அவரை போட்டியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்தது. இதில் கட்சியில் அதிகாரமிக்க நபர்களான முன்னாள் அதிபர் ஒபாமாவும், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் கட்சி வெற்றி கேள்விக்குறியாகிறது என கவலை தெரிவித்து, பைடன் போட்டியிலிருந்து விலகுவதே சரியென கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன. இதனை தொடர்ந்து பைடனும் போட்டியிலிருந்து விலகுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.