உலகே நடுங்கும் ஹனியே படுகொலை.. கண்சிவந்து கொதிக்கும் ரஷ்யா, சீனா- "இதுவரை நடக்காத போர் இனிதான்.."

Update: 2024-08-01 10:54 GMT

இஸ்ரேல் காசா போர் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

"இது எப்பேர்பட்ட இழப்பு...ஹனியே தன்னோட குழந்தைங்கள இழந்துட்டாரு...அவரு வீட்ட இழந்துட்டாரு...இப்ப தன்னையே இழந்துட்டாரு...

எங்களுக்கு இனி தலைமையே இல்ல...போர்லாம் முடிஞ்சு போச்சு...எங்ககிட்ட கவலையத் தவிர வேறெதுவுமே இல்ல...ஹனியே...உங்கள இழந்ததுக்கு அப்புறம் இனி நாங்க செத்துட்டா கூட நல்லது தான்..."

இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டவரும்... காசா மக்களால் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவரும் தான் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே...

இஸ்ரேலுடனான போரில் கிட்டத்தட்ட 40,000 உயிர்களைப் பலி கொடுத்திருக்கும் காசாவுக்கு ஹனியே இறப்பு ஓர் பேரிழப்பு...

ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களின் நம்பிக்கையும் ஒரு நொடியில் சரிந்த பரிதாபம்...

"இஸ்மாயில் ஹனியே எங்களுக்கு அப்பா மாதிரி...இனி இப்படி ஒரு தலைவர் எங்களுக்குக் கிடைப்பாரா?...இத பார்த்துட்டு இந்த உலகம் சும்மா இருக்கக் கூடாது..."

யார் இந்த இஸ்மாயில் ஹனியே?...

1963ல் காசாவின் ஷாதி அகதிகள் முகாமில் பிறந்தவர் தான் இந்த இஸ்மாயில் ஹனியே... போருக்குப் பழக்கப்பட்டுப்போன பாவப்பட்ட காசா மக்களுக்காக ஐநாவால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று 1987 இல் காசா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் பட்டம் பெற்றார் ஹனியே...

1980ன் பிற்பகுதியில் தன்னை ஹமாஸ் குழுவில் இணைத்துக் கொண்ட ஹனியே... இஸ்ரேலில் சிறைவாசம் அனுபவித்தவர்...

2006ல் பாலஸ்தீன பிரதமராகப் பதவியேற்ற ஹனியே...2017ல் ஹமாஸ் குழுவின் தலைவரானார்...

ஹனியேவின் 3 மகன்களும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்...ஏன் 3 சிறுமிகள், 1 சிறுவன் உள்பட பேரப்பிள்ளைகளையும் இஸ்ரேல் தாக்குதலில் இழந்தவர் ஹனியே...

அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹனியே நாடு கடத்தப்பட்டு கத்தாரிலும் துருக்கியிலும் இருந்தபடி செயல்பட்டு வந்தார்...

போருக்குப் பிறகு எத்தனையோ ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்ட போதும்...இஸ்ரேல் படைகளால் தேடப்பட்டு வந்த முதல் நபரே இஸ்மாயில் ஹனியே தான்...

இந்த சூழலில் தான் ஹனியே ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்...

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற போது தெஹ்ரானில் வைத்து இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது...

ஹனியே தங்கியிருந்த வீட்டைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்...

இதுவரை கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்களில் மிக உயரிய தலைவர் ஹனியே தான்...

இஸ்ரேல் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில் ஹனியேவின் இறப்பு இஸ்ரேலின் வெற்றி...

ஆனால் ஹமாசுக்கோ இது பேரிழப்பு...பிணைக்கைதிகள் விவகாரம்...போர் நிறுத்தம்...குறித்தெல்லாம் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர் ஹனியே தான்...

ஒரு காசா தலைவர் ஈரானில் வைத்து கொல்லப்பட்டது என்பது போர் விரிவடைவதற்கான அறிகுறியோ என்ற சந்தேகமும் எழுகிறது...

ஹமாஸ் தலைவர்களுக்கு ஈரானில் பாதுகாப்பில்லை என்ற இஸ்ரேலின் சமிக்ஞையாகவும் இது தெரிகிறது...

இந்த ஆண்டு ஏப்ரலில் ஈரானும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின... அந்தப் பதற்றம் தணிந்த சிறிது காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை விரோதத்தை மேலும் தூண்டியுள்ளது...

உலகம் முழுவதும் ஹனியே படுகொலைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன...

ஹனியே சிந்திய ரத்தம் ஒருபோதும் வீணாகாது என ஈரானும் எச்சரித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது...

ஹமாஸ், ஈராக், எகிப்து, பாகிஸ்தான், சிரியா, ரஷ்யா, சீனா, லெபனானின் ஹிஸ்புல்லா, துருக்கி என பலதரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது...

ஹனியே கொல்லப்பட்டதால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த பலனும் இல்லை என்பது நிரூபணமாகி உள்ள நிலையில் இன்னும் எத்தனை காலம் காசா மீதான போர் நீடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்