காசாவின் ரஃபா நகரில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
அதனை விசாரித்து உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்தது. மேலும் அங்கு நிலவும் உணவு பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் காசாவின் ரஃபா நகர் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
ரஃபா நகரில் மே 7 அன்று இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், மே 18 வரை 8 லட்சம் பாலத்தீன மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.