பூட்டானில் 90 % தடுப்பூசி அளிப்பு - மலைப்பகுதிகளில் துரித விநியோகம்

மலைப்பிரதேச நாடான பூட்டானில், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 90 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை பற்றிய பின்னணி தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

Update: 2021-10-01 09:58 GMT
7.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய, மலைப் பிரதேச நாடான பூட்டானில், இதுவரை 2,600 பேருக்கு மட்டும் கொரோனா தொற்றுதல் ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பூட்டானில், சாலை வசதிகள் அதிகம் இல்லாத, மலைப் பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்களில், பெரு வாரியான மக்கள் வசிக்கின்றனர். முதல் டோஸ் தடுப்பூசி விநியோகத்திற்கு இந்தியா 4.5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை அனுப்பியது. பின்னர் 5 லட்சம் மாடெர்னா தடுப்பூசிகள், அமெரிக்காவில் இருந்து கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் பூட்டானிற்கு அனுப்பப்பட்டது. 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளை டென்மார்க் அனுப்பியது.விமானம் மூலம் பூட்டானில் உள்ள பாரோ சர்வதே விமான நிலையத்திற்கு அனுப்பபட்ட தடுப்பூசிகளை, நாடு முழுவதும் விநியோகம் செய்ய மிகச் சிறப்பான முன் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும், சாலை மூலமாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், சில பகுதிகளுக்கு கால் நடையாகவும் தடுப்பூசிகள் துரிதமாக விநியோகிக்கப்பட்டன.பள்ளிகள், புத்த மடாலயங்கள் மற்றும் இதர பொதுக் கட்டிடங்களில்  தடுப்புசி விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் அனைவருக்கும் விரைவாக அளிக்கப்பட்டது.டிஜிட்டல் முறையில் முன் பதிவு செய்யும் முறையின் மூலம், தடுப்பூசி விநியோகம் எளிமையாக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுபவர்களிடம் அச்சத்தை போக்க, நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி விநியோக பணிகளில், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு, 4,500 தன்னார்வ தொண்டர்கள் நாடு முழுவதும் உதவினார்கள்.இவற்றின் மூலம் பூட்டானில் உள்ள 18 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 90 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மிகக் குறுகிய காலத்தில் அளிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்