ஜெர்மன் தூதரகம் முன்பு குவிந்த ஆப்கானியர்கள் - அகதிகள் விசா வழங்க வலியுறுத்தல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் முன்பு குவிந்த ஆப்கானியர்கள், அகதிகள் விசா வழங்கக் கோரி வலியுறுத்தினர்.
சுமார் 150 ஆப்கானியர்கள் ஜெர்மன் தூதரகத்தின் முன்பாகவும், துருக்கிய தூதரகத்தின் முன்பாகவும் குவிந்து விசா பதிவு செய்யக் கோரி காத்திருந்தனர். தாங்களும் மனிதர்கள் தான் எனவும், ஆனால் தங்களுக்கு உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 5 லட்சம் ஆப்கானியர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மக்கள் யாரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்திற்கு அவர்கள் தேவை என்றும் தலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.