"ஓபியம் உற்பத்தியை நிறுத்துவோம்" - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியதும் ஓபியம், கெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்து உள்ளனர். ஆனால் போதைப்பொருள் வர்த்தகமின்றி அவர்களால் ஆட்சி நிர்வாகம் செய்ய முடியுமா? என்பதை அலசும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்....
ஓபியம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
பார்ப்பதற்கு துலிப் மலர்களை போன்று ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கசகசா மலர்களின் மத்தியில் இருக்கும் பச்சை நிற விதைப்பையில், சிறு கீறலிட்டதும் வரும் பாலை காயவைத்தால் அதுதான் ஓபியமாகிறது. இதுதான் ஹெராயின் போன்ற போதைப்பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் உற்பத்தியாகும் ஓபியம் எவ்வளவு...?
உலகில் விற்கப்படும் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓபியம் ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தியாகிறது என ஐ.நா. தரவுகள் காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட 9 ஆயிரத்து 900 ஓபியம், 10 ஆயிரத்து 387 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள் எனவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
தலிபான்கள் ஓபியம் உற்பத்தி
ஆப்கானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறியதும் அமெரிக்கா நிதியை நிறுத்தியது. இதனால் நிதி தேவைக்காக ஓபியம் உற்பத்தியை தொடங்கிய தலிபான்களின் ஆட்சியில், ஓபியம் உற்பத்தி கொடிக்கட்டி பரந்தது. 2000-ல் ஷரியா சட்டத்தை காரணம் காட்டி தலிபான்கள் உற்பத்திய நிறுத்தியிருந்தாலும், அமெரிக்க படையெடுப்பை அடுத்து மீண்டும் உற்பத்தியை தொடங்கினர்.
தலிபான்களின் ரூ. 3,000 கோடி போதைப்பொருள் வர்த்தகம்
அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்ட தலிபான்களுக்கு ஆயுதம் வாங்க போதைப்பொருட்கள் பேருதவியாக இருந்தன. அவர்களுடைய ஆண்டு வருவாயில் 60 %, அதாவது சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவே கிடைத்ததாக தெரிவித்துள்ளது, அமெரிக்க ராணுவம்...
ஓபியம் உற்பத்தியை தடுக்க அமெரிக்கா ரூ. 59,347 கோடி செலவு
ஆப்கானிஸ்தானில் ஓபியம் உற்பத்தியை தடுக்க 2002 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, அமெரிக்கா 59 ஆயிரத்து 347 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. மக்கள் பிற பயிர்களை பயிரிட ஊக்குவித்த அமெரிக்கா, தலிபான்கள் வசமிருந்த பகுதிகளில் ஓபியம் உற்பத்தி தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தாக்குதல் நடத்தியது. இருப்பினும் ஒபியம் உற்பத்தியை முழுமையாக ஒழிக்க முடியவில்லை....
ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு 2 லட்சத்து 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஓபியம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு தலிபான்கள் வசமிருந்தது எனவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிரிடும் பரப்பளவு அமெரிக்கா நடவடிக்கையால், குறையவில்லை என்பதையும் வறட்சி காரணமாக 2017-ல் இருந்து கணிசமாக குறைந்துள்ளது என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.
தலிபான்கள் முடிவு அவர்களுக்கு சவாலாகுமா...?
தற்போது போதைப்பொருள் உற்பத்தியை நிறுத்துவதாக தலிபான்கள் கூறுவது அவர்களுடைய நிதி ஆதாரத்திற்கு சவாலாக அமையும் என்பதே வல்லுநர்களின் கூற்றாக இருக்கிறது. தலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்தையும், மேம்பாட்டு நிதியையும் பெறும் போது, இந்த கட்டுப்பாட்டை பயனுள்ளதாக்க வாய்ப்பு உள்ளது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் பிலிப் பெர்ரி கூறுகிறார். இருப்பினும் தேவை அதிகரிப்பு காரணமாக அதிக லாபம் கிடைக்கும் பட்சத்தில் ஆயுத குழுக்கள், ஒபியம் உற்பத்தியை தொடரலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.