சமூக ஊடகங்களில் ஆப்கானியர்கள் - முன் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்களை தாலிபான்களிடம் இருந்து பாதுகாக்க, பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
சமூக ஊடகங்களில், தலிபான்களின் கொள்கைகளை முன்பு விமர்சித்து பதிவிட்டுள்ளவர்களை தேடி கண்டுபிடித்து, தண்டனை அளிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதைத் தடுக்க, பேஸ்புக், டிவிட்டர் மற்றும் லிங்கெடின் ஆகிய சமூக ஊடகங்கள், ஆப்கானிஸ்தான் பயனாளிகளுக்கு சில சிறப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளன.
வெளியாட்கள் ஒரு பயனாளியின் நண்பர்கள் பட்டியலை பார்வையிடுவதையும், அவரின் நண்பர்கள் பட்டியிலில் உள்ளவர்களை தேடுவதையும் தற்காலிகமாக
தடை செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைத் துறைத் தலைவர் நெத்தேனியல் கிளெய்ச்சர் டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானியர்கள், ஒரே ஒரு கிளிக் மூலம் தங்களின் பேஸ்புக் கணக்குகளை பூட்ட வகை செய்ய ஒரு சிறப்பு பொத்தான் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முகநூலில், நண்பர்கள் பட்டியலில் இல்லாத வெளி நபர்கள்,
ஒருவரின் பதிவுகள் மற்றும் புகைபடங்களை பார்வையிடுவது, பகிர்வது ஆகியவை இதன் மூலம் தடை செய்யப்படுகிறது.
டிவிட்டரில் பதியப்பட்ட பழைய பதிவுகளை அழிக்க முயற்சி செய்யும் பதிவர்களின் கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்த, இணையதள ஆவணக்காப்பக அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரச்சனைக்குரிய பழைய பதிவுகளை கண்டுபிடித்து அழிக்க முடியாதவர்களின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்கெடின் பயனாளிகளின் பதிவுகளை அழிக்கவும், கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்கவும் இதே போல ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.