களைகட்டும் காதலர் தினம் : காதலர்களை கவர்ந்திழுக்கும் கண்கவர் நகரங்கள்...காதலர்கள் உற்சாகம்
உலகெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காதலர்களை கவர்ந்திழுக்கும் கனவு நகரங்களை காட்சிப்படுத்துகிறது இந்த தொகுப்பு...
உலகெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காதலர்களை கவர்ந்திழுக்கும் கனவு நகரங்களை காட்சிப்படுத்துகிறது இந்த தொகுப்பு...
முகமலர்ச்சியூட்டும் மூன்றெழுத்து மந்திரம்.., இரு மனங்களின் இணைப்புப் பாலம்... பேரன்பின் பெருமைமிகு புகலிடம்... காரணமின்மையின் காட்சி மாலை... காதல்....பிப்ரவரி மாதத்தின் பிரத்யேக சிறப்பாக கருதப்படுவது காதலர் தினம். காதலர் தினத்தையொட்டி உலகெங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ரோஸ் டேவில் தொடங்கி, வேலன்டைன்ஸ் டேவில் முடியும் காதலர் தினத்தை, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும், காதல் புறாக்களாக பறந்து கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள்....காதல் ஜோடிகளை கவர்ந்திழுக்கும் இடங்கள், உலகெங்கும் கணக்கில்லாமல் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில், காதல் ஜோடிகளின் முதலாவது தேர்வாக உள்ள இடம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்...காற்றுடன் காதலும் கலந்திருக்கும் நகரான பாரிஸில், பற்றும் பாசமும் பரவிக் கிடக்கிறது. காதலர்களின் சொர்க்கபுரி என்று பாரிஸை சொல்லலாம். பார்ப்போரை பரவசப்படுத்தும் பாரிஸில், கண்கவர் இடங்கள் ஏராளம்..வானுயர்ந்து நிற்கும் ஈபிள் டவர், பழமையை பறைசாற்றும் லாவேரு அருங்காட்சியகம், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், செழுமையுடன் ஓடும் செயின் நதி... இவ்வாறு பாரிஸின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம்...அதிலும் குறிப்பாக மாலைப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் பாரிஸ் நகரை வர்ணிக்க, வார்த்தைகள் போதாது...பாரிஸைத் தொடர்ந்து, காதல் ஜோடிகள் அதிகம் படையெடுக்கும் இடம் இத்தாலியின் வெனிஸ்...மிதக்கும் நகரமான வெனிஸில், வீதிக்கு வீதி காதல் ஜோடிகளைக் காண முடியும்.. நன்னீர்க் கால்வாய்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில் பேசில்லியா தேவாலயமும், சான் மாரோ சதுக்கமும் காலத்தின் பெருமையை கம்பீரமாக சுமந்து நிற்கின்றன.காதலர்களின் மனதை கொள்ளையடிக்கும் அடுத்த இடம் மாலத்தீவு....சிறு சிறு தீவுக் கூட்டங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மாலத்தீவு, காதல் ஜோடிகளின் மனதை மயக்கும் இடம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...வானத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் கடலும், கூரையால் வேயப்பட்ட சொகுசு விடுதிகளும், மாலத்தீவின் மகோன்னதத்தை எடுத்துரைக்கின்றன. அதற்கு அர்த்தமளிக்கும் விதமாக கடற்கரைகளில் கட்டியணைக்கும் காதலர்கள், கவர்ச்சியின் உச்சம்...காதலர்களை கிறங்கடிக்கும் அடுத்த நகரம் கியாட்டோ.... மலைகளும், மேகக் கூட்டங்களும் மோதி விளையாடும் இடமான கியாட்டோ, ஜப்பானின் முந்தைய தலைநகர். பழம்பெரும் வரலாற்றுடன், பண்டைய காலம் தொட்டு, பசுமை போர்த்திக் காணப்படும் கியாட்டோதான் காதல் ஜோடிகளின் வாசஸ்தலம்.. நிஜோ கோட்டையும், கியோமிசு மலைக் கோவிலும் கியாட்டோவின் அழகை மெருகேற்றுகின்றன...காதலர்களை மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் சுண்டியிழுக்கும் இடம் ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்விக்... அட்லாண்டிக் பெருங்கடலில் சாண்ட்விச் துண்டுபோல் மிதக்கும் ஐஸ்லாந்து, காதல் ஜோடிகள் அதிகம் ஆக்கிரமிக்கும் பிரதேசம். ஆர்ப்பரிக்கும் அருவிகளும், ஆச்சர்யமூட்டும் வெப்ப நீருற்றுகளும் ஐஸ்லாந்தின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.பனியும் பசுமையும் படர்ந்து காணப்படும் ஐஸ்லாந்தில், அரோரா போராலிஸ் எனப்படும் வானியல் நிகழ்வு அடிக்கடி தென்படும். அரோராவுக்கு மத்தியில் கரம் பற்ற வேண்டுமென்பதே ஆயிரமாயிரம் காதலர்களின் கனிவான எண்ணம்....