"அமைதியை விரும்புகிறது அமெரிக்கா" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்
அமெரிக்கா அமைதியையே விரும்புவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் மீது ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரான் ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்த அவர், அமெரிக்க படைத்தளத்துக்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டதாக குறிப்பிட்டார். அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதாகவும், தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், உலகுக்கு அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருவதாகவும், அவர் குற்றம்சாட்டினார். அணு ஆயுத உற்பத்தியை ஈரான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய டிரம்ப், தாம் அதிபராக இருக்கும் வரை அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட முடியாது என்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்ற தகவலையும் வெளியிட்டார். அமெரிக்கா அமைதியையே விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், ஈரானுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றும் கூறினார்.