இலங்கையில் கனமழை எதிரொலி : 55 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்
இலங்கையின் வடமாகாணத்தில் 5 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 55 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்ததால், கிளிநொச்சியில் 31 ஆயிரம் பேர், முல்லைத்தீவில் 12 ஆயிரம் பேர் என மொத்தம் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால், அங்கிருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், ராஜாங்கனை, தெதுரு ஓய, அங்கமுவ மற்றும் இரணைமடு ஆகிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புத்தளம்- மன்னார் பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கடற்படையின் 9 சிறிய ரக படகுகளும், விமானப்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.