"எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் இலங்கை பல பிரச்சினைகளை சந்திக்கும்" - அதிபர் சிறிசேன
தனது ஆலோசனைகளை செயல்படுத்தவில்லை என்றால், இலங்கை, பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசியலில், உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில், அதிபர் மைத்ரி பால சிறிசேன, அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை, விரைவில் சரி செய்யப்படும் எனவும், அதுவரை அரசின் செயல்பாடுகளை நடுநிலையான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் அறிவுறுத்தினார். மின்சாரம், பெட்ரோலியம், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், இடையூறில்லாமல் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய சிறிசேன, தனது ஆலோசனைகளை செயல்படுத்தாவிட்டால், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில், இலங்கை பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.