5 மலைகளுக்கு நடுவே திருவிழா.. சாமி குடியிருக்கும் `சாமி வீடு’..

Update: 2024-06-30 17:18 GMT

திருவிழாவில் தொலைந்து போவதெல்லாம் அந்தக்காலம்...நாகரீக போர்வையில் திருவிழாவே தொலைந்து போய் விடுமோ என்ற அஞ்ச வைக்கிறது இந்தக்காலம்...

ஆனால், பழமை மாறாமல்...புதுமையின் பொய்ச்சாயம் படராமல்...பகட்டின்றி...பாசாங்கில்லா புன்னகையுடன்....குழந்தைகளைப் போல் குதூகலத்துடன் துள்ளிக் குதித்து மகிழ்கின்றனரே...இவர்களைப் போன்றோரால் தான் இன்னமும் காக்கப்படுகின்றன பாரம்பரியத் திருவிழாக்கள்...

இதோ...வேலூர் மாவட்டம்...தொங்குமலை...நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் திருவிழா உங்களை அன்போடு வரவேற்கிறது...

அந்தக்காலம் தொட்டே மரத்தை சாமியாகக் கும்பிடும் வழக்கம் உண்டு நம்மிடம்...இதுதான் ஜாலமரம்...வெறும் மரமல்ல...இம்மக்களின் கடவுள்...மரத்தில் பெயர்கள், உருவங்கள் வரைந்து அதையே காளியம்மனாக வழிபட்டு வருகின்றனர் கிராம மக்கள்...

இதுதான் காளிக்கு உகந்த இடமாம்...குளத்தில் குளித்து விட்டு...சாமியைக் கும்பிட்டு...கைகளில் கட்டைகளால் ஆன கத்திகளை ஏந்திக் கொண்டு பாட்டுப் பாடி உலா வருவதும் ஒரு சடங்கு...

விரதமிருந்து...ஊர் சீதனத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்து...இதோ தாங்கள் அம்மனாக வழிபடும் இந்த ஜாலமரத்திற்கு பூசைகள் செய்து வழிபடுகின்றனர் ஊர் மக்கள்...

இத்திருவிழாவில் அடுத்த சுவையான பகுதி எருதுகட்டும் நிகழ்ச்சி...பெரியோரிடம் ஆசி வாங்கிய இளைஞர்கள்...காளைகளைத் தழுவி ஓடவிட்டு விளையாடி மகிழ்வர்... இதைக் காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, எல்லுப்பாறை என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 12 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து விடுவர்...

இந்தத் திருவிழாவின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா?.... விழாவின் கடைசி நாள் பெண்களுக்கு மட்டுமே அனுமதி... கும்மியடித்துக் குத்தாட்டம் போட்டு மகிழ்வர் பெண்கள்...

இதோ...இந்த வீட்டில் தான் சாமி இருக்கிறதாம்...மணக்கோலத்தில் அமர்ந்துள்ளனரே இந்த மழலைகள்...இவர்கள் இருவருமே பெண் குழந்தைகள்...திருமண கோலத்தில் அமர வைத்து கும்மிபாடி...தெய்வங்களே தங்களைக் காண வந்து விட்டதாய் நெகிழ்கின்றனர் கிராம மக்கள்...

இதன் பின்னணியில் இருக்கும் கதையைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா?... முன்பொரு காலத்தில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்... முன்னோர்களை வழிபடுவதுதானே நம் இயல்பு...அதனால் இறந்தவர்களைக் கடவுளாக நினைத்து தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர் ஊர் மக்கள்... அனைவருக்கும் அருள் வந்து ஆடினால் தான் விழாவே நிறைவுறும்...தொடர்ந்து அனைவரும் குழந்தைகளின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வீடு திரும்புவர்...

பெண்களுக்கான இந்தக் கடைசி நாள் திருவிழாவில் ஒருவேளை குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி ஆண்கள் வந்து விட்டால் அவ்வளவு தான்...கடும் கோபம் கொண்டு விடுமாம் சாமி... அருள் வந்து ஆடி...ஆண்களை ஓட ஓட விரட்டி அடித்து விட்டுதான் மறுவேளை...அடிவாங்குவது மட்டுமல்லாமல் 5 ஆயிரம் அபராதமும் அல்லவா கட்ட வேண்டும்...பயந்து கொண்டு கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார்கள் இந்த ஆண் மகன்கள்...

விழா முடிந்தும் குதூகலக் குத்தாட்டம் தான்...இதோ மணக்கோலத்தில் வீட்டிற்கு அழைத்து வரப்படுவது சாதாரண குழந்தைகள் அல்ல...ஊர் மக்களைப் பொறுத்தவரை சாமி...

Tags:    

மேலும் செய்திகள்