நம் பிள்ளைகள் பள்ளி சென்றால் உயிருடன் வீடு திரும்புவார்களா?

Update: 2024-09-20 11:28 GMT

வளைந்து நெளிந்து செல்லும் அழகான பாதைகள், பசுமையான மரங்கள் என கண்களை குளிர்ச்சியாகும் இந்த மலைத்தொடர், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஜவ்வாது மலை தொடர் தான்.

இங்குள்ள பீஞ்சமந்தை, ஜார்தான் கொள்ளை, பாலாம்பட்டு என்ற 3 மலைகிராம ஊராட்சிகளுக்குட்பட்டு 84 குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள், அடிப்படை கல்வி பெற, தேந்தூர், தொங்குமலை, அல்லேரி, குடிகம், குண்ராணி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் பீஞ்சமந்தையில் உயர்நிலை பள்ளி, ஆதிதிராவிட நல விடுதி செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த பள்ளிகள் மற்றும் விடுதிகள் குப்பைகூளங்களுடன், போதுமான அடிப்படை வசதிகள் இன்றி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

இதனால் அங்கு தங்க முடியாமல் மாணவர்கள் , ஓடைகள், ஆபத்தான பாதைகள், காடுகள், புதர்கள் வழியாக தினமும் வீட்டிற்கு சென்று மீண்டும் பள்ளிகளுக்கு வரும் நிலையே நீடிப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். பழங்குடியினர் நலத்துறையின் மூலம் படுக்கை விரிப்புகளோ, போர்வைகளோ தரப்படாத சூழலில், அவற்றை தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வந்தாலும் அதை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

சரியான உணவு கூட தரப்படுவதில்லை என்கின்றனர் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள்...

எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மலைவாழ் மக்களின் குழந்தைகள் அடிப்படை கல்வி கற்று, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்