கலெக்டருக்கு படிக்க வந்தவர்களுக்கு கல்லறை கட்டிய UPSC பயிற்சி மையம்-உயிர் பிரியும் நொடிவரை போராட்டம்
கலெக்டருக்கு படிக்க வந்தவர்களுக்கு கல்லறை கட்டிய UPSC பயிற்சி மையம் - உயிர் பிரியும் நொடிவரை போராட்டம்
டெல்லி யுபிஎஸ்சி பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ளத்தால் 2 மாணவிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
"ஐஏஎஸ்" எனும் பெருங்கனவோடு வந்த பிள்ளைகளை எமன் வடிவில் வந்து வாரிச் சென்று விட்டது இந்த பாழாய்ப் போன வெள்ளம்... என்ன நடந்தது?...
டெல்லிக்குச் சென்று...கஷ்டப்பட்டு படித்து...தேர்வில் வென்று...சைரன் வைத்த காரில் வந்திறங்கி தங்கள் பெற்றோரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற கனவுடன் தானே இவர்கள் வந்திருப்பார்கள்...
ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்றாலே தலைநகரில் தான் பயிற்சி தரமாய் இருக்கும் என்பது தான் பலரது பரவலான நம்பிக்கை...
இது தான் டெல்லி பழைய ராஜிந்தர் நகரில் அமைந்துள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையம்...
கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கில் தலைநகர் டெல்லியே தத்தளிக்க...அருகில் இருந்த வடிகால் சேதமாகி... பயிற்சி மையத்தின் அடித்தளத்தினுள் வெள்ள நீரும் கழிவுநீரும் சேர்ந்து புகுந்ததில் கிட்டத்தட்ட 30 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்...
இரவு நேரம்...சுற்றி கும்மிருட்டு...உள்ளே தண்ணீர்...எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் அந்த மாணவர்களின் மனநிலை?...
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தன தீயணைப்பு வாகனங்கள்...
தரைத்தளத்திற்கு 8 அடிக்குக் கீழ் அமைந்துள்ளது இந்த அடித்தளம்.. அதிகாரிகள் சென்று பார்த்த போது தான் அடித்தளமும், சாலையும் ஒன்றுபோல் காணப்பட்டுள்ளது...10 முதல் 12 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது...ஆக...வெள்ளம் அடித்தளம் இருந்ததையே மறைக்குமளவு மூழ்கடித்துள்ளது...
வாகன பார்க்கிங் அல்லது ஸ்டோர் ரூமைப் போல் பயன்படுத்த அமைக்கப்பட்ட அடித்தளத்தில் மாணவர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுகிறதா?...
அந்த அடித்தளத்தில் மாணவர்கள் படிக்க நூலகம் அமைத்தது தான் 3 உயிர்கள் பறிபோகக் காரணம்...
உத்தர பிரதேசம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிவின் டால்வின் ஆகிய 3 பேரும் தான் இந்த வெள்ளத்தில் உயிரை விட்டவர்கள்...
இயற்கை மீது பழிபோடுவது கூட பாவம்... இது முழுக்க முழுக்க மனிதர்களின் பேராசையால் நிகழ்ந்த தவறு...
பேஸ்மென்ட்டில் சட்ட விரோதமாக நூலகம் அமைத்த பயிற்சி மையம் தான் இதற்கு முழுப்பொறுப்பும்...
மேலும் அந்தக் கட்டடக் கதவுகள் பயோமெட்ரிக் சிஸ்டத்தால் இயங்குபவையாம்...ஆக...மின்சாரம் இல்லையென்றால் வெளியில் வருவது கடினம்... இதுவும் மாணவர்கள் சிக்கியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது...
யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர், கட்டட உரிமையாளர் ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்...
அந்தப் பகுதி முழுவதுமே பயிற்சி மையங்களால் நிரம்பியுள்ளது...ஆனால் கிட்டத்தட்ட எல்லா மையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை இதே நிலைதான் போல...
வெள்ளம் புகுந்து விட்டதாக போலீசுக்கும், மீட்புப் படைக்கும் தகவல் கூறி...நீண்ட நேரம் கழித்துதான் அவர்கள் வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது...
பல அரசியல் கட்சித் தலைவர்களும் இவ்விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்...டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது..
இறந்த மாணவர்களின் இறப்புக்கு நீதிகேட்டு சக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் நாடே கதிகலங்கிப் போயிருக்கிறது... இதை அரசியலாக்க வேண்டாம் என வரும் அரசியல் கட்சியினரையும் திருப்பி அனுப்பி வருகின்றனர் மாணவர்கள்...