நடுரோட்டில் கர்ப்பிணி, பச்சிளம் குழந்தையை வைத்து போராட்டம்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சி

Update: 2024-09-21 10:31 GMT

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் தீண்டாமை வேலியை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில், 30 குடும்பங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த குமார் என்பவர், ஐந்து குடும்பங்கள் வசித்து வந்த 30 சென்ட் நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி, அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இரும்பு வேலி அமைத்தார். இதனால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், தாங்கள் பயன்படுத்தி வந்த முன்பக்க பாதையை அடைத்து அமைத்துள்ள தீண்டாமை வேலியை அகற்றக்கோரி, குழந்தைகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன், நில உரிமையாளர் குமார், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீர்நிலைப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அரசு சார்பில் ஒரு சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து 30 குடும்பங்களுக்கும் 2022ம் ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்கப்பட்டுள்ள இடத்தில் அரசு வீடுகள் கட்டித் தந்து அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை, இப்பகுதியில் வாழ்வதற்கும், தீண்டாமை வேலியை கடந்து வரும் வகையிலும், வேலியின் ஒரு பகுதி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்