தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள கரிசல்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியின் உடலை, கடந்த 5ம் தேதி கயத்தாறு போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர் சாத்தூர் படந்தாலைச் சேர்ந்த காந்திமதி என்பது தெரியவந்தது.
போலீசார் மேலும் விசாரித்ததில், காந்திமதி காணாமல் போன அன்று, அதே பகுதியைச் சேர்ந்த சண்முகப்பாண்டியனுடன் காரில் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் சண்முக பாண்டியனை பிடித்து விசாரித்தபோது, காந்திமதியை கொன்று கயத்தாறு காட்டுப் பகுதியில் எரித்தது தெரியவந்தது.
வட்டித் தொழில் செய்து வந்த காந்திமதி, தன்னிடம் ஒன்றரை லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு பணத்தை திருப்பித் தரமுடியாது என்று கூறியதால் கொலை செய்ததாக சண்முகப் பாண்டியன் கூறியுள்ளார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சண்முக பாண்டியனை போலீசார் சிறையில் அடைத்தனர்.