மூதாட்டி வீட்டுக்குள் மின் கம்பம் -தினமும் பயத்திலேயே தவிக்கும் நிலை...சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி சம்பவம்
புத்தன்தருவை பெருமாள்புரத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி, குடிசை வீட்டில் வசித்து வந்ததால் அவருக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. புதிய வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு வேண்டி நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால். மின் வாரிய அலுவலர்கள் மின் இணைப்பு தர மின் கம்பம் அமைக்க வேண்டும் என்றும், 58 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கட்டவும் கூறியுள்ளனர். தான் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் விற்று மின் இணைப்புக்காக மூதாட்டி பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூதாட்டி பொன்னம்மாள் வீடு கட்ட தேர்வு செய்துள்ள இடத்தின் அருகே மின் கம்பத்தினை நட்டுள்ளனர். மேலும். மின் கம்பம் சாயாமல் இருப்பதற்காக அருகே மற்றொரு மின்கம்பத்தை வைத்துள்ளனர். அந்த கம்பம் பொன்னம்மாள் வீடு கட்டும் இடத்திற்குள் நடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால், மின்வாரிய அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி பொன்னம்மாள் அங்கேயே வீடு கட்டினார். மின் ஊழியர்கள் நட்ட துணை கம்பம் பொன்னம்மாள் வீட்டு சமையலறை நடுவே உள்ளது. எனவே அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி மூதாட்டி பொன்னம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.